Monday 2 January 2012

பெரியாறு அணை விவகாரம் தீக்குளித்த வாலிபரின் இறுதி ஊர்வலம்




தேனி : முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் கேரள, மத்திய அரசை கண்டித்து தேனியில் தீக்குளித்து இறந்த வாலிபரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த ஒருமாத காலமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. தேனி பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள தனியார் டிராவல்ஸில் டிரைவராக பணிபுரிந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். ரஜினி ரசிகரான இவர், வேனில் ஐயப்ப பக்தர்களை ஏற்றிக் கொண்டு சபரிமலைக்கு சென்றபோது, கேரளாவை சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்கினர்.

இதில் மொத்தம் 15 வாகனங்கள் சேதமடைந்தது. சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் ஜெயபிரகாஷ் நாராயணன் மிகவும் வேதனை அடைந்தார். இந்த பிரச்னையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, கடந்த 19ம் தேதி தேனியில் உள்ள நேரு சிலையை கட்டிப் பிடித்துக்கொண்டு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

படுகாயத்துடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயப்பிரகாஷ் நாராயணன் நேற்றுமுன்தினம் இறந்தார். அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மதியம் தேனி கொண்டு வரப்பட்டது. பங்களாமேட்டில் உள்ள அவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சிவக்குமார், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ. தங்கதமிழ்ச்செல்வன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சையதுகான், தேனி நகராட்சி தலைவர் முருகேசன், துணை தலைவர் காசிமாயன், திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மூக்கையா, நகர செயலாளர் இலங்கேஸ்வரன், தேமுதிக சார்பில் மாநில துணை செயலாளர் முருகேசன், மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட செயலாளர் சந்திரன், அஇபாபி சார்பில் எம்எல்ஏ. கதிரவன், ரஜினி மன்ற மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் மற்றும் பல்வேறு வர்த்தக சங்கத்தினர் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி, இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கம்பம் ரோட்டிலுள்ள மயானத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உடல் தகனம் செய்யப்பட்டது. அங்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் பலரும் பேசினர். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 3வது தற்கொலை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே சின்னமனூர் அருகேயுள்ள சீலையம்பட்டியை சேர்ந்த தேமுதிக பேச்சாளர் சேகர், சின்னமனூரை சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தற்போது தீக்குளித்த ஜெயபிரகாஷ் நாராயணன் 3வது நபர். வெறிச்சோடியது தேனி: அணை பிரச்னை தொடர்பாக கடந்த ஒரு மாதமாக தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன. சில நாட்களாகதான் அமைதி நிலவுகிறது. இந்நிலையில் தீக்குளித்த ஜெயபிரகாஷ் நாராயணன் உயிரிழந்த சம்பவத்தால் நேற்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நேற்று காலை முதல் தேனியில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்தும் முடங்கியதால் தேனி வெறிச்சோடியது.

நேரு சிலை அகற்ற திடீர் போராட்டம்

ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இறுதி ஊர்வலம் தேனி நேரு சிலை வழியாக சென்றது. பலரும் நேரு சிலை முற்றுகையிட திட்டமிட்ட தகவல் வெளியானதால் போலீசார் ஏராளமானோர் நேரு சிலையை சுற்றி வளையம் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஆனால் ஏராளமான இளைஞர்கள் நேரு சிலை பீடம் மீது ஏறி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை கண்டித்துதான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தீக்குளித்துள்ளார். இதனால் நேரு சிலை இங்கு இருக்கக்கூடாது என கோஷமிட்டனர். மேலும், அதே இடத்தில் பென்னிகுக் அல்லது இறந்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிலையை அமைக்க வேண்டும் எனக்கோரி தொடர்ந்து கோஷம் எழுப்பினர். ஊர்வலத்தில் வந்த வைகோ கேட்டுக்கொண்டதை அடுத்து, சிலையை முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=12436

No comments:

Post a Comment