Monday, 26 December 2011

முல்லைப் பெரியாறு அணையை காக்க மெரினா கடற்கரையில் பேரணி, கலை நிகழ்ச்சி

பதிவு செய்த நாள் : 12/26/2011 12:29:25 AM




சென்னை : ‘முல்லை பெரியாறு அணையை காக்க ஒன்று கூடுவோம்’ என்ற போராட்டம், மே பதினேழு இயக்கம் சார்பில் மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் நேற்று மாலை நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, விக்ரமன், சேரன், தங்கர்பச்சான், கவுதமன் முன்னாள் எம்எல்ஏ வேல்முருகன் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்ம் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்கத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாக்க வலியுறுத்தி கலை நிகழ்ச்சி மற்றும் கலங்கரை விளக்கம் வரை பேரணி நடைபெற்றது. பின்னர், கலங்கரை விளக்கம் அருகில் நடந்த கூட்டத்தில் வைகோ பேசியதாவது: கேரள அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதித்து விட்டது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது. அதற்காக, நிதியையும் ஒதுக்கி விட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் மக்கள் கொந்தளித்து எழுந்து விட்டனர்.

சாதாரண மக்களுக்கும் உணர்வு வந்து விட்டது. இனிமேல், கேரளத்தினர் அணையை நெருங்க மாட்டார்கள்; அவர்கள் பயந்து விட்டனர். தமிழகத்தில் இருந்துதான் அரசி, பருப்பு, காய்கறி போன்ற பொருட்கள் கேரளாவுக்கு செல்கிறது. நம்முடைய தயவு இல்லாமல், அவர்களால் வாழ முடியாது. இங்குள்ள மலையாளிகளின் கடைகளை அடிக்க வேண்டாம். அணையை உடைக்க மாட்டோம்; நெருங்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மீறினால், கேரளாவுக்கு நிரந்தர பொருளாதார முற்றுகை விடுக்க வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.

http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=11835

No comments:

Post a Comment